காங்கிரஸை 63 இடங்களிலும் வீழ்த்த பிரசாரம்: சீமான்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்காக தொடர் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், " சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம்.
இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரசாரம் செய்வோம்.
எனது பிரசாரத்தை நாளை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ம் தேதி வரை பிரசாரம் செய்வேன்.
தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரசாரம் அமையும். காங்கிரஸை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம்.
வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும். எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும்.
காங்கிரஸை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம். காங்கிரஸை அழிப்பதே எங்களது நோக்கம்," என்றார் சீமான்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த பிரசாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சீமானின் பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து வியூகம் வகுக்கப்பட்டது.